Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி உளவுத்துறை பட்டியல் தயாரித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
முந்தைய காலங்களில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போதைய தமிழக அரசு இதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்திருந்தது. கூடுதலாக பணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சில டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரங்களுடன் புகார்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் எந்தெந்த டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் சேகரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள், பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ள கடைகள், திறப்பு மற்றும் மூடல் நேர விதிமீறல்கள் உள்ளிட்ட விவரங்களையும் கணக்கெடுத்து விரிவான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் காவல்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ