Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 24 மே (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களின் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவியானது தற்போது சுற்றுலாத்துறை மூலம் பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் உள்ள நூற்றாண்டு பழமைமிக்க அபாய வளைவை அகற்றி, புது அபாய வளைவு கட்டும் பணி மற்றும் தாரை தளம் அமைக்கும் பணிகள், உடைமாற்றும் அறைகள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளானது தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகளின் போது குற்றாலம் மெயின் அருவிப்பகுதியில் உள்ள சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது பணிகளை நிறுத்தி வைத்து சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதா என்பது குறித்து ஆய்வு நடத்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், சீசன் காலகட்டம் நெருங்குவதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பராமரிப்பு பணியை மீண்டும் தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், இந்த வருட சீசனில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழும்பிய நிலையில், தற்போது பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, ஒரு வார காலத்திற்குள் பணிகளை முடிக்க தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் சுற்றுலாத் துறையினருக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில், இரவு பகல் பாராது பணிகள் ஆனது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சீசன் தொடங்குவதற்கு முன்பு குற்றால அருவியானது புதுப்பொலிவு பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN