அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பறந்து விழுந்தது- டூவீலர் ஓட்டுநர் நூலிழையில் உயிர்தப்பினார்
திருப்பூர், 24 மே (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கொடுவாய் பகுதியில் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை திடீரென கழன்று காற்றில் பறந்து விழுந்ததில், பின்னால் டூவீலரில் சென்றவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற
சாலை விபத்து


திருப்பூர், 24 மே (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கொடுவாய் பகுதியில் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை திடீரென கழன்று காற்றில் பறந்து விழுந்ததில், பின்னால் டூவீலரில் சென்றவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரிலிருந்து கொடுவாய் வரை இயக்கப்படும் அரசு டவுன் பஸ் (தடம் எண் 15A) நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கொடுவாய் வந்துவிட்டு மீண்டும் திருப்பூர் நோக்கி புறப்பட்டது.

கொடுவாயிலிருந்து சிறிது தூரம் சென்றபோது பஸ்சின் மேற்கூரை திடீரென கழன்று காற்றின் வேகத்தில் பின்புறமாக பறந்து சாலையில் விழுந்தது.

அப்போது பஸ்சின் பின்னால் டூவீலரில் வந்தவர் மீது மேற்கூரையின் ஒரு பகுதி விழுந்ததில் அவர் லேசான காயமடைந்தார்.

அதிர்ஷ்டவசமாக பெரும் உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கிராமப்புற சாலையில் சம்பவம் நடந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு டவுன் பஸ்களில் பழைய பஸ்கள் இன்னும் இயக்கப்பட்டு வருவதாகவும், முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக மொபசல் பஸ்களை டவுன் பஸ்களாக மாற்றி இயக்குவதால் உதிரிபாகங்கள் சீர்கேடாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

புதிய அரசு நிர்வாகம் பழைய டவுன் பஸ்களை மாற்றி தரமான புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam