Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 25 மே (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பாலாற்றில் ஏற்பட்ட நீர்வரத்தை பயன்படுத்தி சில தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக ஆற்றில் திறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இந்த சூழலை பயன்படுத்தி, சில தோல் தொழிற்சாலை நிர்வாகங்கள் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக பாலாற்றில் கலக்கவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் பாலாறு நீர் துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடுவதாக பொதுமக்களும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பாலாற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் தோல் கழிவுநீர் கலப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதனால் பாலாற்றுப் படுகையில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நிலத்தடி நீர் குடிப்பதற்கே தகுதியற்றதாக மாறிவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam