Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அரசியல் அழுத்தம் தர வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது தமிழகத்திற்கு பின்னடைவு என தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையம் கர்நாடக அரசுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியதையும், அதன் அடிப்படையில் கர்நாடகம் 2019ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் எதிர்ப்பால் அந்த அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியது முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை ஏற்க முடியாது என்றும், அதுவே தமிழகத்தின் காவிரி நீருரிமை பாதிக்கப்படுவதற்கான தொடக்கமாக அமையும் என்றும் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் விரைவில் புதிய திட்ட அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்திருப்பதாகவும், அந்த அறிக்கைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கினால் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க, திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய தமிழக அரசு தொடர் அரசியல் அழுத்தம் வழங்க வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ