Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 மே (ஹி.ச.)
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மாவீரன் ஜெ.குருவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உருக்கமான நினைவஞ்சலி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஜெ.குருவின் அரசியல் பயணம், சமூக அர்ப்பணிப்பு மற்றும் அவரது கனவுகளை நினைவுகூர்ந்து உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
எனது மரியாதைக்கும், அன்புக்கும் உரிய அண்ணன் மாவீரன் ஜெ.குரு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறேன். அவரது உழைப்பையும், தியாகத்தையும் இந்த நாளில் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாவீரன் ஜெ.குரு அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், அவர் நமது உள்ளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவர் மறைந்தது முதல் இன்று வரையிலான 8 ஆண்டுகளில் அவரை நினைக்காத நாளில்லை. அவருடன் கழித்த தருணங்களும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளும் தான் அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெ.குருவின் அரசியல் கனவை நினைவுகூர்ந்த அவர், “கட்சியும், சமூகமும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அவரது கனவு. அதனை நோக்கித்தான் அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்து உழைத்தார். சமூக முன்னேற்றத்திற்காகவும், அரசியல் மாற்றத்திற்காகவும் அவர் எடுத்த முயற்சிகள் என்றும் மறக்க முடியாதவை” என்று தெரிவித்துள்ளார்.
அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு தற்போது அனைவரிடமும் இருப்பதாக கூறிய அன்புமணி ராமதாஸ், “மாவீரன் ஜெ.குருவின் இலக்குகளையும், அவர் விரும்பிய சமூக மாற்றத்தையும் நிறைவேற்றுவதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு பாமக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மாவீரன் ஜெ.குருவின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / P YUVARAJ