Enter your Email Address to subscribe to our newsletters

விஜயவாடா , 25 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் மாநில அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சந்திரபாபு நாயுடு தலைமையில் விஜயவாடாவில் நடைபெற்ற ‘ஒன் பேமிலி–ஒன் என்ட்ரப்ரென்யோர்’ MSME வளர்ச்சி மாநாடு–2026 நிகழ்ச்சியில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ள 38 புதிய எம்எஸ்எம்இ தொழில் பூங்காக்களுக்கு முதலமைச்சர் இணையவழி மூலம் அடிக்கல் நாட்டினார்.
மேலும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு மெட்டா , அமேசான் , ஜோஹோ கார்ப்பரேஷன் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளது.
இந்த எம்எஸ்எம்இ பூங்காக்களில் தொழில்முனைவோருக்கு தேவையான ‘பிளக்-அண்ட்-ப்ளே’ வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களில் 100 தொழில் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, சில இடங்களில் செயல்பாடுகள் தொடங்கியுள்ளன.
கிராமப்புற தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ரத்தன் டாடா இனோவேஷன் ஹப் மூலம் குப்பம், மங்களகிரி, பித்தாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட ‘ரூட்டேக் ஸ்மார்ட் வில்லேஜ் சென்டர்’ விரிவாக்க மையங்களும் திறந்து வைக்கப்பட்டன.
அதேபோல், மாநிலம் முழுவதும் 45 தொழில் கிளஸ்டர்களை மேம்படுத்த ₹200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பொதுவான வசதி மையங்கள் அமைக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், பி.எம். விஸ்வகர்மா பயனாளிகள், கொள்கை அமைப்பாளர்கள், நிதி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA