மாமூல் கேட்டு மிரட்டிய த.வெ.க ஒன்றிய செயலாளரை கைது செய்ய வேண்டும் - செங்கல் சூளை உரிமையாளர்கள் போராட்டம்
வேலூர், 25 மே (ஹி.ச.) வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் தலைமையிலான சில நிர்வாகிகள், சூளை உரிமையாளர்களை தொடர்புகொண்டு மா
மாமூல் கேட்டு மிரட்டிய  த.வெ.க ஒன்றிய செயலாளரை கைது செய்ய வேண்டும் -  செங்கல் சூளை உரிமையாளர்கள் போராட்டம்


வேலூர், 25 மே (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் தலைமையிலான சில நிர்வாகிகள், சூளை உரிமையாளர்களை தொடர்புகொண்டு மாதம் ரூ.1 லட்சம் மாமூல் தர வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

பணம் தர மறுத்தால் தொழிலை நடத்த விடமாட்டோம் என்றும், பொய் புகார்கள் அளித்து சிக்கலில் மாட்டிவிடுவோம் என்றும் அச்சுறுத்தியதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, சம்பந்தப்பட்ட ஒன்றிய செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

ஆனால், புகார் அளித்து பல நாட்கள் ஆகியும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்தும், மிரட்டலில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், இன்று நூற்றுக்கணக்கான செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கணியம்பாடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், நாங்கள் முறையாக அரசுக்கு வரி செலுத்தி தொழில் செய்து வருகிறோம். நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எங்களை நம்பியுள்ளது.

ஆனால், அரசியல் கட்சியின் பெயரைச் சொல்லி சிலர் மாமூல் கேட்டு மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. காவல்துறை உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்டமாக சூளைகளை மூடி தொடர் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

போராட்டம் காரணமாக கணியம்பாடி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b