Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாத காலத்தில் பதிவான குற்றச் சம்பவங்கள், குறிப்பாக வன்முறை குற்றங்கள், ரவுடியிசம் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் ஆகியவை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அதேபோல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயல்பாடு குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.
புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது, விரைவு நீதிமன்றங்களின் செயல்பாட்டை வேகப்படுத்துவது, பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகரிப்பது மற்றும் ‘பெண்கள் உதவி எண் 1091’ சேவையின் செயல்திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
சமீபத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, முதலமைச்சர் இந்த அவசர ஆலோசனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், காவல்துறையின் பதிலளிப்பு நேரத்தை குறைக்கவும் புதிய வழிகாட்டுதல்கள் இன்றைய கூட்டத்தில் வெளியாகலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் அமைதியையும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலையும் உறுதி செய்வதே அரசின் முதன்மை நோக்கம் என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b