Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 மே (ஹி.ச.)
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான பூமிபூஜை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகளின் நலனைக் காக்கவும் தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்து கொண்டு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், தமிழ்நாடு அரசு 30.11.2018 மற்றும் 07.06.2022 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், இவ்வழக்கில் 13.11.2025 அன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மேகதாது திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், திட்டம் தொடக்கநிலையிலேயே உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும், இத்திட்டம் முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டதா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமமே தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறி வழக்குகளை முடித்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
அத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு 11.12.2025 அன்று சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தொடர்பான உள்விசாரணை முடிவடைந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மேற்கண்ட தீர்ப்பு விவரங்கள் மற்றும் சட்ட ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ