காதலிக்க மறுத்த இளம்பெண் வீடு மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு
கோயம்புத்தூர், 25 மே (ஹி.ச.) கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில், காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிதா (பெ
பாட்டில் வீச்சு


கோயம்புத்தூர், 25 மே (ஹி.ச.)

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில், காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண், கோயம்புத்தூரில் கல்லூரியில் படித்தபோது சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் என்பவருடன் பழகியதாக கூறப்படுகிறது. பின்னர் கார்த்திக் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்ததால், இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கார்த்திக் தொடர்ந்து இளம்பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் கேடிஎம் மற்றும் பல்சர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மண்ணெண்ணெய் நிரப்பிய பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது வீசியதுடன், வெளியே நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணின் தந்தை சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

வீசப்பட்ட பாட்டில்களில் ஒன்று வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பற்றியது. இதில் கேன்வாஸ் ஷூ எரிந்து சேதமடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தாளியூர் பேரூராட்சியில் பிட்டராக பணிபுரியும் சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில், 4 பேர் மீது தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam