ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி தம்பதி பரிதாப பலி
ஓமலூர், 25 மே (ஹி.ச.) சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏனாதி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஏனாதி ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது. இந்த வழியாக காரில் சென்ற தம்பதி, சுர
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி தம்பதி பரிதாப பலி


ஓமலூர், 25 மே (ஹி.ச.)

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏனாதி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று இரவு பெய்த கனமழையால் ஏனாதி ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 6 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது.

இந்த வழியாக காரில் சென்ற தம்பதி, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரின் ஆழத்தை அறியாமல் வாகனத்தை செலுத்தியுள்ளனர்.

நீருக்குள் சென்ற சில நொடிகளிலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து முழுவதுமாக மூழ்கியது.

காரின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தானியங்கி முறையில் இயங்குவதால், நீரின் அழுத்தம் காரணமாக அவற்றை திறக்க முடியாமல் இருவரும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர், நீண்ட நேரம் போராடி காரை வெளியே மீட்டனர். ஆனால், காருக்குள் சிக்கியிருந்த தம்பதி ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்தவர்கள் சேலம் பகுதியைச் சேர்ந்த 42 வயது ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி 38 வயது சுமதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலங்களில் தொடர்ந்து நீர் தேங்குவதாகவும், அபாய எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை காரணமாக நீரின் ஆழம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஓமலூர் காவல்துறையினர், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ரயில்வே நிர்வாகத்திடம் சுரங்கப்பாதையில் நீர் வெளியேற வடிகால் வசதி மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரின் ஆழத்தை அறியாமல் வாகனங்களை செலுத்த வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b