கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மே 31 வரை இலவச அனுமதி
திண்டுக்கல், 25 மே (ஹி.ச.) கோடை விடுமுறையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிரதான சுற்றுலா தலங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மே 31 வரை இலவச அனுமதி


திண்டுக்கல், 25 மே (ஹி.ச.)

கோடை விடுமுறையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிரதான சுற்றுலா தலங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் நெரிசலை குறைக்கவும், அனைத்து தரப்பு மக்களும் இயற்கை எழிலை கண்டு ரசிக்கவும் ஏதுவாக, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி,

கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பொதுமக்கள் இன்று முதல் மே 31, 2026 வரை முற்றிலும் கட்டணமின்றி பார்வையிடலாம்.

இந்த சிறப்பு அனுமதியின் கீழ், சுற்றுலா பயணிகளின் விருப்ப தலங்களான புகழ்பெற்ற குணா குகை, அடர்ந்த பைன் மரக்காடுகள், உள்ளிட்ட வனத்துறை பராமரிப்பில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் நுழைவு கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்.

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், விடுமுறையை கழிக்கவும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பிரபல சுற்றுலா தலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வனப்பகுதியின் தூய்மையை பேண வேண்டும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், வனத்துறை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொடைக்கானலின் இயற்கை அழகை அனைவரும் கண்டு ரசிக்க இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b