தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை, 25 மே (ஹி.ச.) தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சு
தமிழகத்தில்  19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை


சென்னை, 25 மே (ஹி.ச.)

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே 25) முதல் மே 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கொங்கு மண்டலத்தில் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாவட்டங்களை பொறுத்தவரை திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய மற்றும் தென் மாவட்டங்களான பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய ஏழு மாவட்டங்களிலும் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை மே 26-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மே 28-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை விட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 6 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திருப்பூர் மாவட்டம் வட்டமலை நீர்த்தேக்கம், மதுரையில் தலா 3 செமீ, திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b