Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 மே (ஹி.ச.)
மேகதாது அணை திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2025 நவம்பர் 13ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடக அரசுக்கு மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க தடை விதிக்க முடியாது என்றும், தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள அச்சங்கள் அனைத்தும் ஆரம்ப கட்டத்திலானவை என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.
மேலும், DPR தயாரித்து மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் நிலையில், அதை இறுதி செய்வதற்கு முன் தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கருத்துகளை கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு கடந்த 2025 டிசம்பரில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வின் சேம்பர் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் விரிவான வாதங்கள் முன்வைக்க வேண்டியிருப்பதால், வழக்கமான நீதிமன்ற அமர்வில் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், மறுஆய்வு மனுவின் விவரங்களையும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், 13.11.2025 தீர்ப்பை மறுஆய்வு செய்ய போதுமான காரணங்கள் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து, நீதிமன்ற அறை விசாரணைக்கான கோரிக்கையையும் நிராகரித்து, தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P