Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
சென்னை மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்கி மாயமான 16 வயது சிறுவனின் உடல், இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பிறகு துறைமுகம் அருகே கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
ஆவடி அடுத்த கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சுதர்சன், கடந்த 22ஆம் தேதி மாலை நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கடல் அலையில் சிக்கி அவர் மாயமானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மெரினா போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக கடலோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்று இரவு சென்னை துறைமுகம் அருகே சிறுவனின் உடல் கரை ஒதுங்கியதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P