Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மைய மருந்துக் கிடங்கில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக மருந்துக் கிடங்கில் உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் இருப்பு நிலவரத்தை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
கிடங்கில் இருந்து மாவட்ட மருந்துக் கிடங்குகளுக்கு மருந்துகள் அனுப்பப்படும் நடைமுறைகள், குளிர்பதன வசதி, தரக்கட்டுப்பாடு ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ் கூறியதாவது:
தற்போது மாதாந்திர அறிக்கை மூலம் மருந்து இருப்பு கணக்கிடப்படுகிறது. இதனால் சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, மாநிலம் முழுவதும் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள், மருந்தகங்களை ஒருங்கிணைத்து ‘டிஜிட்டல் டிரக் இன்வென்டரி’ அமைப்பை உருவாக்குகிறோம்.
இதன் மூலம் எந்த மருந்து எந்த மருத்துவமனையில் எவ்வளவு இருப்பில் உள்ளது, காலாவதி தேதி, தேவை ஆகியவற்றை தலைமை அலுவலகத்தில் இருந்தபடியே உடனுக்குடன் அறிய முடியும். தட்டுப்பாடு ஏற்படும் முன்பே மாற்று கிடங்கில் இருந்து மருந்துகளை அனுப்பி வைக்கலாம். அடுத்த 3 மாதங்களில் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
மேலும், காலாவதியான மருந்துகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், குளிர்பதன சேமிப்பு முறையை தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தரமான மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b