Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி 54 கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உதவி ஆட்சியர்கள் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, 09.05.2026 முதல் ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், 25.05.2026 அதிகாலை தென்காசி மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற முதல்கட்ட புலத்தணிக்கையில், மொத்தம் ஆய்வு செய்யப்பட்ட 54 கல்குவாரிகளில் 18 கல்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, அந்த 18 கல்குவாரிகளின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 குழுக்களின் விரிவான ஆய்வறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ