Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
சென்னை பெரம்பூர் பகுதியில் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த இளைஞர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13 வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்தமிழ் நகர் 8வது பிளாக் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு அமர்ந்து மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாறிய நிலையில், அருகில் கிடந்த இரும்பு ராடுகளை எடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 8 கார்கள் மற்றும் 5 ஆட்டோக்கள் என மொத்தம் 13 வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கியதாக கூறப்படுகிறது.
கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வெளியே வந்து பார்த்ததுடன் உடனடியாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரை அங்கிருந்தபடியே பிடித்தனர். தப்பியோடிய மற்றவர்களை தேடிய போலீசார் இன்று காலை மேலும் நான்கு பேரை பிடித்தனர்.
முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (29), வீரமணி (28) உள்ளிட்ட 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெரம்பூரில் போதை இளைஞர்கள் வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam