Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 25 மே (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 877 நீர்நிலைகளில் (குளம், கண்மாய், குட்டை, ஊரணி) படிந்துள்ள வண்டல் மண்/மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இதற்கான முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களது உரிய ஆவணங்களுடன் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சரிபார்த்து, 10 நாட்களுக்குள் உரிய அனுமதி வழங்குவர்.
அளவீட்டு விவரங்கள் (2 ஆண்டுகளுக்கு ஒருமுறை):
நன்செய் நில மேம்பாட்டிற்கு: ஏக்கருக்கு 75 க.மீட்டர் (ஹெக்டேருக்கு 185 க.மீட்டர்).
புன்செய் நில மேம்பாட்டிற்கு: ஏக்கருக்கு 90 க.மீட்டர் (ஹெக்டேருக்கு 222 க.மீட்டர்).
மண்பாண்டத் தொழிலுக்கு: அதிகபட்சமாக 60 க.மீட்டர்.
நேரக் கட்டுப்பாடு: அனுமதி ஆணை பெற்றவர்கள், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல வேண்டும்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b