திருவண்ணாமலையில் பாடகர் வேல்முருகன் தனது மகளுடன் கிரிவலம்
திருவண்ணாமலை, 25 மே (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகிகள், இயக
Velmurugan


திருவண்ணாமலை, 25 மே (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகிகள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் என பலர் வருகை தந்து அண்ணாமலையாரை தரிசித்து 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க குலுங்க பாடலும், ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால பாடலும், நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடிய பிரபலமான பாடகர் வேல்முருகன் தனது மகளுடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டார்.

இதற்கு முன்னதாகவே இந்த திருத்தலத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வார விடுமுறை நாள் என்பதால் நேற்றைய தினம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ததைத் தொடர்ந்து பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இரவில் கிரிவலம் சென்றனர்.

அப்போது எமலிங்கத்தின் அருகில் இருந்து நிருதி லிங்கம் வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் டார்ச் லைட் அடித்தவாறு சுமார் 2 கிலோ மீட்டர் வரை இருளில் கிரிவலம் சென்றனர்.

சிறுவர்கள் பெண்கள் வயதானவர்கள் என அனைவரும் கிரிவலம் செல்லும் நிலையில் மின் இணைப்பு கிரிவலப் பாதையில் தடைபடாமல் இருக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவதை போல் 14 கிலோ மீட்டர் கிரிவலம் பாதையில் மின்வாரிய ஊழியர்கள் குறிப்பாக இரவு நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN