Enter your Email Address to subscribe to our newsletters

ஓசூர், 25 மே (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றார்.
இவரை, மோசடி கும்பல் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. ஓசூர் பகுதியில் 2 கிலோ தங்கப் புதையல் கிடைத்துள்ளது. குறைந்த விலைக்கு தருகிறோம் எனக் கூறி அவரை ஓசூருக்கு வரவழைத்துள்ளனர்.
அவர்களின் பேச்சை நம்பிய முத்துராமலிங்கம், கடந்த வாரம் ஓசூருக்கு வந்து ரூ.18 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட கும்பல், தங்கம் போன்று வடிவமைக்கப்பட்ட போலி நகைகளை அவரிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துராமலிங்கம் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட அசோக் பிரசாத் பிரபு என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற புதையல், குறைந்த விலை தங்கம் என ஆசை வார்த்தை கூறி நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், சந்தேகத்திற்குரிய நபர்கள் அணுகினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ஓசூர் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b