Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 25 மே (ஹி.ச.)
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணைக் குழுவின் விசாரணை நிறைவடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி என்ற மாணவி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
மூக்கில் சதை வளர்ச்சி மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சினைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உயிரிழப்புக்கு மருத்துவ அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டி, சக மாணவிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் மயக்கவியல், ENT மற்றும் பொது மருத்துவ நிபுணர்களும் இடம்பெற்றனர்.
விசாரணைக் குழுவினர், மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் விரிவாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் மருத்துவ பதிவுகள், சிகிச்சை நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் தனது அறிக்கையை தமிழக அரசிடம் குழு தாக்கல் செய்ய உள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam