Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
கோவையில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மிக வேகமாக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்,
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, சம்பவத்தில் தொடர்புடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், காவல்துறை தலைமை இயக்குநர் நேரடியாக விசாரணை நடத்துமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர்,
சம்பவம் நடந்த உடனேயே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும்” என்று உறுதியளித்தார்.
தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துகள் இருக்கலாம். ஆனால், இந்த ஆட்சி வெறும் ஐந்து ஆண்டுகளுக்கானதல்ல. தமிழக முதலமைச்சர் அவர்கள்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
முதலமைச்சர் செய்தியாளர்களை அடிக்கடி சந்திப்பதில்லை என்ற விமர்சனத்திற்கும் அவர் பதிலளித்தார்.
முதலமைச்சர் மற்றவர்களைப் போல தினசரி அறிக்கை விடுவதையோ, விவாதிப்பதையோ தனது பாணியாகக் கொண்டவர் அல்ல. மக்களுக்கு தேவையான திட்டங்களையும் அறிவிப்புகளையும் நேரடியாக தெரிவித்து வருகிறார்.
தேவையான நேரத்தில் அவர் நிச்சயம் செய்தியாளர்களை சந்திப்பார்” என்றார்.
கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுவது குறித்த கேள்விக்கு,
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதுவே போதுமானது
என்று கூறினார்.
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலை மற்றும் சிறிய அளவிலான உட்கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவது மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
அமைச்சர்கள் பொறுப்பேற்று மிகக் குறுகிய காலமே ஆகியுள்ளது.
நீண்டகால பிரச்சினைகள் குறித்து இப்போதே கேள்வி எழுப்புவது சரியாக இருக்காது. அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சரின் அறிவுரையின்படி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P