Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 மே (ஹி.ச)
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பகுதியில் குபேந்திரன் என்ற இளைஞர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நேற்று இரவு 9 மணியளவில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
முதற்கட்ட விசாரணையில், கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த சித்திரை திருவிழாவின் போது குபேந்திரனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இந்த கொலைக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக முத்துமணி என்பவர் செயல்பட்டதாகவும், அவருடன் மேலும் நான்கு பேர் இணைந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்திற்கு பிறகு ஐந்து பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை மாநகர போலீசார், குபேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான முத்துமணி உட்பட ஐந்து பேரையும் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வலைவீச்சு நடைபெற்று வருகிறது.
கோவில் அருகே பரபரப்பான பகுதியில் நடந்த இந்த படுகொலை சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்திரை திருவிழா முடிந்த சில நாட்களிலேயே நடந்துள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b