Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
சென்னை தமிழ்நாடு தலைமைச் செயலகம்த்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய் குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி பவானிஸ்வரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், காவல் துறையின் கண்காணிப்பு, இரவு நேர ரோந்து, பள்ளி மற்றும் கல்லூரி சுற்றுவட்டார பாதுகாப்பு, பெண்கள் உதவி எண்களின் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், பெண்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதேபோல் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கும்பல்களை கண்காணிக்கவும் காவல் துறைக்கு உத்தரவு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தனிப்படை அமைக்கும் கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டிருந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam