Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 மே (ஹி.ச.)
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் தொடர்ந்து உரையாடி வந்துள்ளார்.
இதனை கவனித்த தாய், சிறுமியை கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.
தாயின் கண்டிப்பால் மனமுடைந்த சிறுமி, யாரிடமும் சொல்லாமல் நேற்று இரவு 7.30 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பதற்றமடைந்த பெற்றோர் காந்திபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். நேற்று இரவு முழுவதும் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
சிறுமியின் செல்போன் சிக்னல் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ததில், அவர் வெள்ளக்கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக வெள்ளக்கோவில் சென்ற தனிப்படை போலீசார், அங்கு தங்கியிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டு கோவை அழைத்து வந்தனர். பின்னர் குழந்தைகள் நல குழு முன்னிலையில் ஆலோசனை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,
பதின்ம வயதினர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களுடன் பழகுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும், சிறுமியிடம் பேசிய நபர் யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b