வாகன சோதனையில் சிக்கிய 170 கிலோ கஞ்சா - ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் கைது
சென்னை, 26 மே (ஹி.ச.) சென்னை அடுத்த தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸார் நடத்திய வாகன சோதனையில் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதை சட்ட விரோதமாக பதுக்கி எடுத்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர
Weed


சென்னை, 26 மே (ஹி.ச.)

சென்னை அடுத்த தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸார் நடத்திய வாகன சோதனையில் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதை சட்ட விரோதமாக பதுக்கி எடுத்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த நான்கு பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக காவல் துறையினர் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள், குரோம்பேட்டை - திருநீர்மலை சர்வீஸ் சாலை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் கார் ஒன்று வந்துள்ளது.

அதனை தடுத்து நிறுத்தி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, காருக்குள் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்து கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், அவற்றின் எடை சுமார் 170 கிலோ இருக்கும் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்த போலீஸார், அதனைக் கொண்டு வந்த நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் வாயிலாக, அவர்கள் நான்கு பேரும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் பல்லா வராஹாலா பாபு, கல்லா சத்யா நாராயணா, சேனாபதி துர்கா பிரசாத் மற்றும் வங்காலா துர்கா பிரசாத் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்கள் நான்கு பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்கள் அனைவரையும் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், நேற்றைய தினம் (மே 25), தனிப்படை போலீஸார் மேற்கொண்ட சிறப்பு ஆய்வின் அடிப்படையில், 45 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் உட்பட 84 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், 5.25 கிலோ கஞ்சா, 3.5 கிராம் மெத்தபெட்டமைன், 115 உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 2.6 கிலோ கிராம் அளவில் குட்கா புகையிலை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சூழலிலேயே தற்போது தாம்பரத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் காவல் துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில், சென்னையில் இந்த அளவு கஞ்சா ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN