Enter your Email Address to subscribe to our newsletters

நாகப்பட்டினம், 26 மே (ஹி.ச.)
நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், படகுடன் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், அதே பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் காலை மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். வழக்கமாக ஒரு நாள் மீன்பிடிப்பிற்குச் செல்லும் இவர்கள், நேற்று இரவுக்குள் கரை திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், இன்று காலை வரை மீனவர்கள் கரை திரும்பாததால், சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், கடலோர காவல்படையின் ரோந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.
மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் கோடியக்கரை கடற்கரையில் கூடி, கடலையே வெறித்துப் பார்த்தபடி கண்ணீருடன் காத்திருக்கின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் படகு திசைமாறிச் சென்றிருக்கலாம் அல்லது இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என சக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். அண்டை மாவட்ட மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்பு கொண்டு, கடல் சீற்றம் குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மீனவர்களின் பாதுகாப்பான மீட்புக்காக தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b