Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது.
இதனிடையே, தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயகுமார் ஆகியோர் நேற்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர்.
ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே இந்த மூன்று எம்எல்ஏக்களும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏக்களை தவெக தங்கள் கட்சியில் இணைத்துள்ளதாகவும், இந்த சதி நாடகத்திற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்றும் திமுகவும், அதிமுகவும் கடுமையாக தவெக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.
இதற்கிடையில் தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை தொகுதி ஆகிய அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று (26-05-26) சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரைச் சந்தித்துப் பேசினர்.
அதனை தொடர்ந்து அவர்கள் வெளியே வந்த அதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது,
25 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தாவல் தடை சட்டத்தின் கீழ். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்திருக்கிறார். அந்த கடிதம் பேரவை தலைவரின் பரிசீலனையில் உள்ளது. இதற்கிடையில் தங்கள் மீது கட்சி தடைத்தாவல் தடை சட்டம் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு அச்சத்தின் காரணமாக மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவை தலைவரிடம் கடிதம் தருகிறார்கள்.
ஏற்கனவே அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கடிதத்தின் மீது ஆய்வு இருக்கின்ற போது, அவர்களுடைய ராஜினாமா கடிதத்தை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது விதிகளுக்கு முரணானது, சட்டத்திற்கு முரணானது இதை ஏற்றுக் கொள்ள கூடாது. அதை எங்களுடைய கோரிக்கையாக வைத்து மனு கொடுத்திருக்கிறோம்.
ராஜினாமா செய்த 5 நிமிடத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட லேமினேஷன் அட்டையுடன் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்குகிறார்கள். இது தலைமைச் செயலகமா? அல்லது தவெக கட்சியினுடைய தலைமை நிலையமா? என்று எங்களுக்கு புரியவில்லை. இதுபோன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதை இந்த அரசு ஊக்குவித்தால் குதிரை பேரம் அளவுக்கு அதிகமாக நடைபெறும். இந்த அரசு குதிரை பேரத்தை குதிரை வேகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது
என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b