பழைய விதிகள் பொது சேவைக்கு தடையாகும் – ஆந்திர முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு
அமராவதி , 26 மே (ஹி.ச.) பொதுமக்களுக்கு அரசு சேவைகள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘பிசினஸ் ரூல்ஸ்’ மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமராவதியில
A


அமராவதி , 26 மே (ஹி.ச.)

பொதுமக்களுக்கு அரசு சேவைகள் மேலும் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘பிசினஸ் ரூல்ஸ்’ மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமராவதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில், ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் அவர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:

தற்போதைய தொழில்நுட்ப வசதிகள் உள்ள நிலையில், பழைய விதிகளை காரணம் காட்டி தேவையற்ற தாமதம் ஏற்படுத்தக் கூடாது.

வழக்கமான நடைமுறைகளை விட்டு விலகி, அதிகாரிகள் புதுமையான சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

மக்களுக்கு சேவைகளை எளிமைப்படுத்துவது முக்கியம்.

அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து தரை மட்டத்தில் இருந்து தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்படுகின்றன.

அவற்றின் அடிப்படையில் அதிகாரிகளின் செயல்திறன் மதிப்பிடப்படும். சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளை பாராட்டவும், செயல்திறன் குறைவாக உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ள நோடல் அதிகாரிகளின் சேவையை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

வருவாய் தொடர்பான பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். குறிப்பாக குடும்பத் தகராறுகள் காரணமாக உருவாகும் நில விவகாரங்களில் மனிதநேய அணுகுமுறையுடன் தீர்வு காண வேண்டும்.

சாதி சான்றிதழ்கள் வழங்கும் செயல்முறையில் மக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல், அவற்றை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து துறைகளும் தங்களின் தகவல்களை ஆர்.டி.ஜி.எஸ் அமைப்பிற்கு வழங்கி, ஒருங்கிணைப்பிற்காக பொறுப்பதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

மேலும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த வலுவான அமைப்பு உருவாக்க வேண்டும். மருத்துவ சேவைகளில் எந்த அலட்சியமும் இருக்கக்கூடாது என்றும் முதல்வர் எச்சரித்தார்.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய் பிரசாத் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA