பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு
சென்னை, 26 மே (ஹி.ச.) மே 28-ம் தேதி (பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தம்), 29-ம் தேதி (முகூர்த்தம்) மற்றும் அதைத் தொடர்ந்து வரும் வாரவிடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள்
Bakrid Festival


சென்னை, 26 மே (ஹி.ச.)

மே 28-ம் தேதி (பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தம்), 29-ம் தேதி (முகூர்த்தம்) மற்றும் அதைத் தொடர்ந்து வரும் வாரவிடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (மே 26-ம் தேதி) 475 பேருந்துகளும், நாளை 845 பேருந்துகளும், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் தினசரி 455 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 80 பேருந்துகளும், 27-ம் தேதிமுதல் 30-ம் தேதிவரை ஒவ்வொரு நாட்களிலும் 170 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்திலிருந்து இன்று 35 பேருந்துகளும், 27-ம் தேதிமுதல் 30-ம் தேதிவரை ஒவ்வொரு நாட்களிலும் 60 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் அன்று 1,085 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b