Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
சென்னை நீலாங்கரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை இ.சி.ஆர் பாண்டியன் சாலை மற்றும் கால்வாய் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக தினமும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு நீடிப்பதால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் நீலாங்கரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும்” என கோஷமிட்டனர். போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நீலாங்கரை காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மின்தடை பிரச்சினை நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். மின்தடை பிரச்சினைக்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam