Enter your Email Address to subscribe to our newsletters

குன்னம், 26 மே (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இடம் அளிக்கப்பட்டது குறித்து திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விமர்சனத்தைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் அருகே இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆ.ராசாவுக்கு எதிராக விசிகவினர் முழக்கங்களை எழுப்பியபோது, அப்பகுதியில் இருந்த திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் முழக்கமிட்டனர்.
இது வாக்குவாதமாக மாறி, சில நிமிடங்களில் இரு தரப்பினரும் கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பேருந்து நிலையம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் இரு கட்சியினரும் வன்முறையில் ஈடுபட்டதால், பயணிகள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்து அங்குமிங்கும் ஓடினர். கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குன்னம் காவல்துறையினர், இரு தரப்பினரையும் விலக்கி விட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மோதலில் காயமடைந்த சிலர் குன்னம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிகவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. இதனை திமுக எம்.பி ஆ.ராசா பொதுவெளியில் விமர்சித்திருந்தார். இந்த விமர்சனமே தற்போதைய மோதலுக்கு மூலகாரணமாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக இரு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என கட்சித் தலைமைகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து,குன்னம் பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b