Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பள்ளிகள் திறப்பு தேதியை ஒத்திவைப்பது குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் உடல்நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2026-27 கல்வியாண்டுக்காக 4 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதியும் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3-ம் தேதி வரை கட்டாய பயிற்சி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வெப்பத்தின் தீவிரம் காரணமாக இந்த தேதிகளில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
புற ஊதா கதிர் குறியீடு 11 என்ற அபாய அளவில் உள்ளதால், மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'எல் நினோ' தாக்கத்தால் கடந்த ஆண்டுகளை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் வெப்ப அலை வீசும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், கடும் வெயிலில் நீண்ட நேரம் இருப்பது குழந்தைகளுக்கு நீரிழப்பு, சோர்வு மற்றும் பிற உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களின் உடல்நல பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வருடன் கலந்து பேசி, பள்ளிகள் திறப்பு குறித்து ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b