திண்டுக்கல் - நேபாளம் ஜோடிகளுக்கு சௌராஷ்டிர முறைப்படி தமிழகத்தில் திருமணம்
திண்டுக்கல், 26 மே (ஹி.ச.) திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ், சுகந்தி தம்பதி. இவரது மகன் சாம்ராட். சௌராஷ்டிர சமூத்தை சேர்ந்த இவர்கள் தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ-வில் வசித்து வருகின்றனர். மேலு
Marriage


திண்டுக்கல், 26 மே (ஹி.ச.)

திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ், சுகந்தி தம்பதி. இவரது மகன் சாம்ராட். சௌராஷ்டிர சமூத்தை சேர்ந்த இவர்கள் தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ-வில் வசித்து வருகின்றனர்.

மேலும், சாம்ராட் அங்குள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் சிஇஓ ஆக பணியாற்றி வருகிறார்.

அதே போல், நேபாளத்தை பூர்விகமாக கொண்டவர் ரூபன், ஜேனட் தம்பதியினர். இவர்களின் மகள் பியாங்கா. இவர்களும் அமெரிக்காவிலேயே வசித்து வருகின்றனர்.

பியாங்காவின் தாத்தா, பாட்டி காலத்தில் இருந்தே இந்த குடும்பத்தினர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வாழ்ந்து வருகின்றனர். மேலும், பியாங்கா அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார்.

இந்தச் சூழலில், பியாங்கா, சாம்ராட் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்துள்ளது.

பின்னர், இரு குடும்பத்தாரும் சம்மதிக்கவே அவர்களின் திருமணம் திண்டுகல்லில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. அமெரிக்காவில் காதல் மலர் பூத்த நிலையில், திருமணம் தமிழகத்தில் நடைபெற்றிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு மணமகன் சாம்ராட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நானும், பியாங்கா-வும் முதன்முதலில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் சந்தித்தோம். நான் அங்கு இருந்த போது, ஒருமுறை நாங்கள் இருவரும் 'காஃபி மீட்' செய்தோம்.

அந்த முதல் சந்திப்பிலேயே எங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டு, ஒருவருக்கு ஒருவர் மிகவும் பிடித்துவிட்டது. நாங்கள் சந்தித்து இதுவரை கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிறது.

பியாங்காவின் தந்தை ரூபன், அம்மா ஜேனெட் ஆகியோரை நேரில் சந்தித்தேன். அவர்களுக்கும் என்னை பிடித்துவிட்டது. அதன்பின், பியாங்காவின் பெற்றோர், எனது பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் பேசினார்கள். அப்போது இரு வீட்டாருக்கும் பிடித்து போகவே, எங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

நாங்கள் இருவரும் தமிழ்நாட்டிற்கு வந்து தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதன்படியே, தற்போது தமிழ்நாட்டில், எங்களது முறைப்படி திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்துள்ளோம் என தெரிவித்தார்.

மணமகனை தொடர்ந்து மணமகள் பியாங்கா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், சாம்ராட்டைத் திருமணம் செய்து கொண்டதிலும், ஜெயப்பிரகாஷ் குடும்பத்தின் மருமகளாக மாறியதிலும் எனக்கு மகிழ்ச்சி. நான் இப்போது 'திண்டுக்கல் மகள்' என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

எங்களது எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து திண்டுக்கல் வரை பரவியுள்ள எங்கள் காதலுக்கு எந்தவித எல்லைகளும் இல்லை.

அமெரிக்காவில் வசித்தாலும், நாங்கள் அடிக்கடி திண்டுக்கல்லுக்கு வருவோம் என மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

Hindusthan Samachar / ANANDHAN