Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 26 மே (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பொத்தையடி கிராமத்தில், சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான ஒரு டன் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் போலீசார் முன்னிலையில் பாதுகாப்பாக தீயிட்டு அழிக்கப்பட்டன.
திண்டுக்கல், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 226 போதைப்பொருள் வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1,080 கிலோ கஞ்சா, நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 118 வழக்குகளில் 650 கிலோ கஞ்சாவும், தேனி மாவட்டத்தில் 42 வழக்குகளில் 118 கிலோ கஞ்சாவும், திருநெல்வேலி மாவட்டத்தில் 66 வழக்குகளில் 318 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
நீதிமன்ற உத்தரவின்படி, கஞ்சா மூட்டைகளின் எடை சரிபார்க்கப்பட்டு, நாங்குநேரி அருகே பொத்தையடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ‘அஸ்பெக்டிக் சிஸ்டம்’ தனியார் எரியூட்டு மையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தீயிட்டு அழிக்கப்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் சரக டிஐஜி சசி மோகன் கூறுகையில், திண்டுக்கல் சரக காவல்துறை சார்பில் போதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்கள் சட்டப்படி முறையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 2,200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.2 டன் போதைப்பொருட்கள் இதேபோன்று அழிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சரக அளவிலான போதைப்பொருள் ஒழிப்புக்குழு (Drug Disposal Committee) மூலமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இனி வரும் காலங்களிலும் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை காலதாமதமின்றி சட்டபூர்வமாக விரைவில் அழிக்க நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam