Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 26 மே (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில், குருபெயர்ச்சி விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
வாக்கிய பஞ்சாங்கப்படி, இன்று காலை 11 மணியளவில் நவகிரகங்களில் சுப கிரகமாக போற்றப்படும் குருபகவான், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
குருபகவானின் இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிட நம்பிக்கை.
இதனை முன்னிட்டு, குரு ஸ்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் இன்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.
குருபெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலங்குடியில் குவிந்தனர்.
கொண்டைக்கடலை மாலை, மஞ்சள் வஸ்திரம் சாத்தி குருபகவானை வழிபட்டு, தங்களது குறைகள் நீங்கவும், கல்வி, செல்வம், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவை கைகூடவும் பிரார்த்தனை செய்தனர். அதிகாலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதை முன்கூட்டியே கணித்த மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருந்தது. கோயிலைச் சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள், நிழற்குடைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
குருபெயர்ச்சியை முன்னிட்டு, வரும் மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை, 10 நாட்களுக்கு குருபகவானுக்கு ‘லட்ச அர்ச்சனை’ நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த லட்ச அர்ச்சனையில் கலந்துகொண்டு வழிபடுவதால் குருவின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.
Hindusthan Samachar / vidya.b