Enter your Email Address to subscribe to our newsletters

தர்மசாலா , 26 மே (ஹி.ச.)
19-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு (18 புள்ளிகள்), குஜராத் (18), ஹைதராபாத் (18), ராஜஸ்தான் (16) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளான நடப்பு சாம்பியன் பெங்களூரு மற்றும் 2022-ம் ஆண்டு சாம்பியன் குஜராத் ஆகியவை, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) மோதுகின்றன.
இமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலா நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும்.
இரு அணிகளும் இந்த தொடரில் ஏற்கனவே 2 முறை மோதியுள்ளன. இதில் பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதேபோல் ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் குஜராத் பதிலடி கொடுத்தது.
இதனால், சரிசம பலத்துடன் இருக்கும் இந்த இரு அணிகளும் மோதும் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிப்போட்டிக்கான நேரடி நுழைவைப் பெறும் அணி எது என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA