Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச)
தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
இந்த சந்திப்பின்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ-ஜியோ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறுகையில்,
ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை முதல்வர் கனிவுடன் கேட்டறிந்தார். அதை விரைவில் சரி செய்வதாக உறுதியளித்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம், என்று தெரிவித்தார்.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b