காங்கிரஸ் கொள்கையில் சமரசம் இல்லை – மாணிக்கம் தாகூருக்கு ஜோதிமணி மறைமுக பதிலடி
சென்னை, 26 மே (ஹி.ச.) 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே மக்கள் பிரச்சினையை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து பல்வேறு விஷயங்களில் திமுகவுடன் முரண்பட
எம்.பி ஜோதிமணி


சென்னை, 26 மே (ஹி.ச.)

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே மக்கள் பிரச்சினையை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து பல்வேறு விஷயங்களில் திமுகவுடன் முரண்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கூட்டணி என்பதற்காக அனைத்தையும் ஆதரித்ததில்லை என்றும், எதிர்க்க வேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக எதிர்த்ததுமில்லை என்றும் கூறியுள்ளார்.

அதுதான் ஜனநாயகம், கூட்டணி தர்மம் என்ற புரிதலோடு கடந்த ஐந்து ஆண்டுகள் கடந்ததாகவும், தற்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், முப்பது ஆண்டுகளாக பயணித்து வரும் காங்கிரஸ் கட்சி உட்பட எந்தக் கட்சிக்கும் நான் அடிமையாக இருந்ததில்லை.

அதற்கான அவசியமும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், அத்தகைய கலாச்சாரத்தை கட்சிக்குள் எதிர்பார்க்காதது காங்கிரஸ் தலைமையின் சிறப்புகளில் ஒன்று என கூறியுள்ளார்.

த.வெ.க. உருவாகும் முன்பு திடீர் திமுக எதிர்ப்பாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை வரலாறு சொல்லும் என்றும், “காமராஜருக்காக கூட வாய்திறக்காமல் இருந்தவர்கள் தற்போது பேசுகின்றனர் என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மேலும், நாம் எதிர்க்க வேண்டியது பாஜகவை; சக கட்சிக்காரர்களை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆதரிக்க வேண்டியவற்றை ஆதரிப்பதும், எதிர்க்க வேண்டியவற்றை எதிர்ப்பதும், கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும்தான் உண்மையான காங்கிரஸ் தொண்டரின் கடமை என ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்ய முடியாது என்றும், எனது நம்பகத்தன்மைக்கு யாரிடமிருந்தும் சான்றிதழ் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூருக்கு சக எம்.பி. ஜோதிமணி இந்த பதிவு மூலம் மறைமுக பதிலடி கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam