Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 26 மே (ஹி.ச.)
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பிரேக் செயலிழந்ததாக கூறப்படும் கனரக லாரி, சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகன ஓட்டியின்மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பதறவைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தின் டாஷ்கேம் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பின்னால் இருந்து வேகமாக வந்த கனரக லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டியின்மீது மோதியது. இதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டார். தொடர்ந்து லாரி, அருகில் இருந்த கார் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கனரக லாரி சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டியை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லாரியின் பிரேக் செயலிழந்ததே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P