Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 26 மே (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் செங்கல் சூளைகள் மற்றும் பாலிஹவுஸ் குடில்கள் கடுமையாக சேதமடைந்து சுமார் ரூ.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் அரசிடம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்தூர், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மத்தூர் அருகே சின்ன ஆலேரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் இரண்டு ஏக்கர் பரப்பளவில் செங்கல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு பெய்த கனமழையால் அவரது தொழிற்சாலையில் சுடப்படாமல் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் செங்கல்கள் மழை நீரில் கரைந்து சேதமடைந்தன.
மேலும், அதே வளாகத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த அதிநவீன பாலிஹவுஸ் பசுமைக்குடில்களும் சூறாவளி காற்றில் சிக்கி கிழிந்து நாசமாகின.
இதுகுறித்து தொழிற்சாலை உரிமையாளர் பாஸ்கர் கூறுகையில்,
இயற்கை பேரிடர்களால் செங்கல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கட்டுமானப் பணிகளில் செங்கற்களுக்கு பதிலாக ஹாலோ பிளாக்ஸ் பயன்பாடு அதிகரித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தொழிலை நடத்தவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், சூறாவளி மழையால் ஏற்பட்டுள்ள ரூ.50 லட்சம் இழப்பை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், நலிவடைந்து வரும் செங்கல் தொழிலையும், அதனை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க செங்கல் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு உடனடி உதவி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam