மணலி அருகே ஏற்பட்ட தீ விபத்து - 15 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைப்பு
சென்னை, 26 மே (ஹி.ச.) சென்னையை அடுத்த மணலி புதுநகர் விச்சூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஆயில் மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, 15 மணி நேர போராட்டத்துக்குப் பின் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொழிற்சாலையில் ச
தீ


சென்னை, 26 மே (ஹி.ச.)

சென்னையை அடுத்த மணலி புதுநகர் விச்சூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ஆயில் மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, 15 மணி நேர போராட்டத்துக்குப் பின் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய ஆயில் பேரல்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால், அப்பகுதி முழுவதும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.

பழைய கழிவு ஆயில்களை சேகரித்து மறுசுழற்சி செய்யும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படும் இந்த தொழிற்சாலையில், இன்று காலை திடீரென தீப்பற்றியது. ஆயில் பொருட்கள் அதிகமாக இருந்ததால், தீ வேகமாக பரவி தொழிற்சாலை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. வெப்பம் அதிகரித்ததால் ஆயில் பேரல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்ததால், மணலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்தது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், மணலியில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிநவீன தீயணைப்பு வாகனங்களும் உதவிக்கு அழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் இணைந்து சுமார் 15 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

இதனிடையே, தொழிற்சாலையில் சட்டவிரோதமாக கழிவு ஆயில் இறக்கி வைத்திருந்ததாக உரிமையாளர் மீது மணலி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மின் கசிவு அல்லது அலட்சியம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தால் ஏற்பட்ட முழு சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Hindusthan Samachar / VINOTH KUMAR P