Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 26 மே (ஹி.ச.)
திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மகரஜோதி (வயது 39). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகரஜோதி, குடும்பத்தை பிரிந்து நெல்லையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் மகரஜோதிக்கும், கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக வளர்ந்த நிலையில், இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, விடுதியில் தங்கியிருந்த சக பெண்களின் அன்றாட நடவடிக்கைகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அனுப்பும்படி அந்த இளைஞர் மகரஜோதியிடம் கூறியுள்ளார். அவரும் ஆண் நண்பரின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என்ற பெயரில் விடுதியில் குளியலறை, துணி மாற்றும் அறை என ஒவ்வொரு இடமாக மறைந்திருந்து அந்தரங்க புகைப்படங்களை எடுத்து இளைஞருக்கு அனுப்பியுள்ளார்.
மகரஜோதியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விடுதி பெண்கள் அவருக்கே தெரியாமல் அவரை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது அவர் மறைந்திருந்து பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்
பின்னர் இது குறித்து விடுதி காப்பாளரிடம் மாணவிகள் தெரிவிக்க, அவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகரஜோதியை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்கள் விடுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN