அனைத்து வகையான பயிர்கள் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 26 மே (ஹி.ச.) தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பை பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் வரவேற்றுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் பெறப்பட்ட பயிர்க்
ராமதாஸ்


தமிழ்நாடு, 26 மே (ஹி.ச.)

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்பை பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளின் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்திருப்பது பாராட்டத்தக்க நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்களுக்கும் ரூ.5,000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்றும் கூறினார்.

இருப்பினும், இயற்கை சீற்றங்கள், உற்பத்தி செலவுகள் உயர்வு, விளைபொருட்களுக்கு போதிய விலை இல்லாமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் அரசு விரிவான நிவாரணத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோல், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு மீண்டும் எளிதில் புதிய கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

சிறு, குறு விவசாயிகளைத் தவிர மற்ற விவசாயிகளுக்கும் கூட்டுறவு பயிர்க்கடனில் தள்ளுபடி வழங்க தமிழக அரசு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P