Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 26 மே (ஹி.ச.)
தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கையை முதல்வர் விஜய் பரிசீலிக்காதது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என சேலம் மாவட்ட விவசாயிகள் சங்கம் கடுமையாக சாடியுள்ளது.
சேலத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில்,
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து விவசாய பயிர் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் விஜய் உறுதியளித்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து இன்று வரை் அந்த வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது விவசாய சமூகத்திற்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர் வறட்சி, பருவமழை பொய்த்தல் மற்றும் இடுபொருள் விலை உயர்வால் விவசாயிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் உடனடியாக பரிசீலிக்க வேண்டும், தவறினால் மாவட்டம் தழுவிய அளவில் தொடர் முற்றுகை போராட்டம், சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம் நடத்தப்படும்.
விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினையில் அரசு மெத்தனம் காட்டுவதை ஏற்க முடியாது.
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b