Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 26 மே (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள
சதுர்வேதமங்கலத்தைச் சேர்ந்த விஷால் (17) என்ற இளைஞர் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 17 பேர் கொண்ட கும்பலால் வீடு புகுந்து தாக்கப்பட்டு, பின்னர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவரது வீட்டின் அருகே உள்ள ஆலமரத்தில் வேஷ்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார்,
விஷாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் விஷாலின் உடலை எரிக்க காவல் ஆய்வாளர் சசிகலா வற்புறுத்தியதாகவும், குடும்பத்தினர் அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியதால் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஷாலின் மரணம் குறித்து கேள்விப்பட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த அவரது நண்பர்கள், சம்பவ இடமான ஆலமரம் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த காவல் ஆய்வாளர் சசிகலா, அவர்களை ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் காவல் ஆய்வாளர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டுவது பதிவாகியுள்ளது.
மேலும், விஷாலின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்றும், விஷாலின் தாயார் மற்றும் சகோதரிகள் அளித்த புகாரை ஏற்காமல் தற்கொலை வழக்காக எஃப்ஐஆர் பதிவு செய்த காவல் ஆய்வாளர் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த மே 21ஆம் தேதி சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam