Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 26 மே (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய விசாரணைக்கு சென்ற விவசாயி விஷம் அருந்தி உயிரிழந்த விவகாரத்தில், காவல் ஆய்வாளர் உட்பட 3 காவல்துறையினரை பணி இடைநீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி தேஸ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார்.
சிவகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயி அந்தோணி ராஜ், கடந்த வாரம் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல் நிலைய விசாரணைக்காக சென்றிருந்தார்.
அப்போது காவல்துறையினர் அவதூறாக பேசி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்கு எதிராக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த அந்தோணி ராஜின் மகன் இசக்கி அளித்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்த சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரன், நிலைய எழுத்தர் கனகராஜ் மற்றும் காவலர் முத்துக்கண்ணன் ஆகியோர் முதலில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
தற்போது மூவரையும் பணி இடைநீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி தேஸ்முக் சேகர் சஞ்சய் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam