Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
தவெக அரசின் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிப்பைத் தொடர்ந்து, பயிர்க்கடன் தள்ளுபடியும் ஏமாற்று வேலை என அவர் தனது எக்ஸ் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,
தேர்தலுக்கு முன்பு, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் கடன் தொகைக்கு ஏற்ப மட்டுமே தள்ளுபடி அறிவித்திருப்பது குறு, சிறு விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்படுவதாகவும், ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு வெறும் ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்திருப்பதை டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு கண்டித்துள்ளதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜயை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam